காவிரி இறுதித் தீர்ப்பு
தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டிஎம்சி காவிரி நீரில் 14.75 டிஎம்சி நீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியதற்கான காரணங்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
1924-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. எனினும், அந்த ஒப்பந்தத்தைஒட்டியே நீர் பங்கீடு தொடர்ந்து நடைபெற்றுள்ளதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு பின்னணியில் எந்த அரசியல் ஈடுபாடும் இல்லை; இந்திய இறையாண்மைக்கு ஒத்துப்போகவும் இல்லை. ஆகையால், இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
அதே நேரத்தில் 1956-ம் ஆண்டு ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்கு பிறகு கர்நாடகத்துக்கு காவிரி விவகாரத்தில் வாதிடும் உரிமை கிடைத்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளைத் தேசிய சொத்தாகக் கருத வேண்டும். அவற்றுக்கு மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது. அப்போதுதான் பிற மாநிலங்களுக்கான பங்கு உரிய முறையில் கிடைக்கும்.
சர்வதேச நீர் பங்கீடு: சர்வதேச அளவில் நதி நீர் பங்கீட்டு பிரச்னைகள் ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை, பொருளாதாரம், சமூக தேவை, பிற நீர் ஆதாரங்கள், பிற மாநிலங்களின் உதவி, நிலத்தடி நீர், தேவையற்ற நீர் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும் என்று ஹெல்சிங்கி, கேம்பைன், பெர்லின் விதிமுறைகள் கூறுகின்றன. இவற்றை சர்வதேச சட்டச் சங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதேகோட்பாடுகளைத்தான் இந்திய தேசிய நீர் திட்டம் 1987, 2002-ம், கூறுகிறது. இருப்பில் இருக்கும் தண்ணீரில் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்குதான் தேசிய நீர் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டை தேசிய கண்ணோட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.
காவிரி நடுவர் மன்றமும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகளையும், அதற்கு ஏற்ப ஏராளமான ஆவணங்களையும், நீர் மேலாண்மை தொடர்பான புள்ளி விவரங்களையும், ஆய்வுத் தகவல்களையும் சேகரித்து இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளது.
சாகுபடிக்கு நீர் எவ்வளவு: தமிழகத்துக்கு 566 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 466 டிஎம்சி, கேரளத்துக்கு 100 டிஎம்சி, புதுச்சேரிக்கு 9 டிஎம்சி நீர் பாசனத்துக்கு தேவைப்படுகிறது என வாதங்களிலும், நிபுணர் குழுக்களின் அறிக்கையிலும் தெரிவிக்கப்படுகிறது.
பயிர்களின் விதம், விளையும் காலம், அதற்கு தேவையான நீர், மழை நிலவரம், கர்நாடகத்தின் வறட்சி, தமிழகம் கர்நாடகம் அளித்த நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையிலும் கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 18.85 லட்சம் ஏக்கருக்கு 250.62 டிஎம்சியும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.71 லட்சம் ஏக்கருக்கு 390.85 டிஎம்சியும் தேவை என நடுவர் மன்றம் முடிவு செய்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் இந்த நீர் பங்கீட்டு பிரச்னையில், மாநில எல்லைகள், மக்கள் தொகை என பல்வேறு வகையில் மாற்றம் கண்டுள்ளன. ஆகையால், இந்த முறை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
ஏற்கெனவே சாகுபடி செய்யப்பட்ட நிலங்களுக்கு நீரை குறைப்பதும் நியாயமற்றது. களநிலவரத்தை அடிப்படையாக கொண்டும், நடுவர் மன்றத்தின் நீண்ட கால ஆய்வுகள், ஏராளமான ஆவணங்கள், நீர் ஒதுக்கீட்டு கணக்குகள், அதற்கு எதிர்த்தும், ஆதரவுமாக மாநிலங்கள் உணர்வுப்பூர்வமான வாதங்களை நீதிமன்றத்தில் வைத்தது ஆகியவற்றுக்கு மதிப்பளித்து நடுவர் மன்ற தீர்ப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் வேறுபடவில்லை, தீர்ப்பில் எந்த குறைபாடுகளையும் கண்டறியவில்லை.
கேரளம்: கேரளம் மொத்தம் 98.8 டிஎம்சி கோரியுள்ளது. அதில், 35 டிஎம்சி அனல் மின் நிலையங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. இதற்கு நடுவர் மன்றம் மறுத்துவிட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி, கேரளத்துக்கு 30 டிஎம்சி ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
புதுச்சேரி: குடிநீருக்கும், சாகுபடிக்கும் புதுச்சேரியில் நிலத்தடி நீர் ஏற்ற வகையில் இல்லாத காரணத்தாலும், 43,000 ஏக்கர் சாகுபடி நிலப்பரப்பு உள்ளதாலும் 6.35 டிஎம்சி ஒதுக்கப்படுகிறது. மேலும் 20 சதவீதம் நீர் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்த ஒதுக்கப்படும் என்ற முந்தைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கூடுதல் நீர் ஆதாரமாக இருக்கும் தமிழக நிலத்தடி நீர்: காவிரி நீர் செல்லும் தமிழக பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. அதுமட்டுமன்றி மழை, வெள்ளத்தாலும், பயிர்களின் நீர் பாசனத்தாலும், ஏரிகளாலும் நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
நிலத்தடி நீரின் மூலம் இந்தியாவில் 45 சதவீதத்துக்கும் அதிகமாக பயிர் பாசனம் நடைபெறுகிறது என மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தின் நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பு நிலத்தடி நீரைக் கொண்டு டெல்டா விவசாயிகள் நாற்றுகளை நடுகின்றனர். பின்னர் வளர்ந்த பயிருக்கு காவிரி நீரை பயன்படுத்துகின்றனர் என்று நிலத்தடி நீர் வாரிய ஆய்வு அறிக்கையிலும், ஐ.நா. வளர்ச்சி திட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி துணை படுகை பகுதியில் 33.7 டிஎம்சியும், வென்னார் துணை படுகை பகுதியில் 5.4 டிஎம்சியும், புதிய டெல்டா துணை படுகை பகுதியில் 32.5 டிஎம்சியும் ஆண்டுதோறும் பம்புசெட்டுகள் மூலம் ஆண்டுதோறும் எடுக்கலாம் என ஐ.நா. வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் 64 டிஎம்சி நீரை எடுக்கும் வகையில் நீர் ஆதாரம் உள்ளது என மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு அறிக்கை அளித்துள்ளது. காவிரி டெல்டா பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் 51.56 டிஎம்சி உள்ளது என்று உலக வங்கியின் நிலத்தடி நீர் நிபுணர் பெர்பெர் என்பவரும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசும் தனது வாதங்களின்போது, 1989-ம் ஆண்டு காவிரி துணை படுகை பகுதிகளில் 28.4 டிஎம்சியும், வென்னா துணை படுகை பகுதிகளில் 7.3 டிஎம்சியும், புதிய டெல்டா துணை படுகை பகுதிகளில் 11.3 டிஎம்சியும் என மொத்தம் 47 டிஎம்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆய்வுகளின் அடிப்படையில், 20 டிஎம்சி நிலத்தடி நீரை, எந்த பாதிப்புமின்றி தமிழகம் பாசனத்துக்காக பயன்படுத்தலாம். இந்த விவகாரத்தை நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. காவிரி நீரில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை கணக்கில் கொண்டு தமிழக டெல்டா பகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீதம் நிலத்தடி நீரை சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படாது. தமிழக நிலத்தடி நீர் ஆதாரம் தொடர்பாக கர்நாடக அரசு முன்வைத்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதேநேரத்தில், தமிழக நிலத்தடி நீர் ஆதாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்டுள்ள ஆய்வு தகவல்களைப்போல், கர்நாடக நிலத்தடி நீர் ஆதார ஆய்வுகள் ஆய்வு தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக நீர் தேவை: கர்நாடக சாகுபடி பாசனத்துக்கு 408 டிஎம்சியுடன் சேர்த்து, பெங்களூரு குடிநீருக்காக 30 டிஎம்சி, புறநகர் பகுதிகளுக்காக 10 டிஎம்சி, கிராமப்புற பகுதிகளுக்காக 6 டிஎம்சி, தொழிற்சாலைகளுக்காக 4 டிஎம்சி, அணையில் வீணாகும் நீர் 6 டிஎம்சி, அனல் மின் திட்டத்துக்கு 1 டிஎம்சி என மொத்தம் 465 டிஎம்சியை கர்நாடகம் கோரியுள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நடுவர் மன்றம் கர்நாடகத்துக்ககான குடிநீரை கணக்கிட்டுள்ளது. தற்போதைய பெங்களூரு குடிநீர் திட்டங்களுக்கு 14.52 டிஎம்சி தேவைப்படுகிறது என்றும் இது 2025-ம் ஆண்டு 30 டிஎம்சியாக இருக்கும் என்றும் கர்நாடகம் வாதிட்டுள்ளது.
காவிரி நீர் படுகையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பெங்களுருவில் உள்ளதாகவும், அங்கு 50 சதவீத குடிநீர் தேவையை நிலத்தடி நீர் பூர்த்தி செய்யும் என கருதியும், பெங்களூரு நகர வீடுகள், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான நீரை நடுவர் மன்றம் குறைத்துவிட்டது.
பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, உலகர தர நகரம் அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்டும், தேசிய நீர் கொள்கைகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாலும் பெங்களூரு குடி நீருக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரை வைத்து 50 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால், குடிநீர், கிராமம் - நகர வீட்டு உபயோக நீர் தேவை ஆகியவற்றுக்கு 6.5 டிஎம்சி ஒதுக்கப்படுகிறது. இதில் 1.75 டிஎம்சி ஏற்கெனவே நடுவர் மன்றம் ஒதுக்கியுள்ளதால் கூடுதலாக 4.75 டிஎம்சி அளிக்கப்படுகிறது.
சம நீதியின் அடிப்படையிலும், கர்நாடகத்தில் 28 மாவட்டங்கள் வறட்சியில் உள்ளதாலும் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவில் இருந்து 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டு, கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி,
கர்நாடகம் - 284.75 (275 + 14.75) டிஎம்சி
தமிழ்நாடு - 404.25 (419 - 14.75) டிஎம்சி
கேரளம் - 30 டிஎம்சி
புதுச்சேரி - 7 டிஎம்சி
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு - 10 டிஎம்சி
கடலில் கலக்கும் நீர் - 4 டிஎம்சி
மொத்தம் -740 டிஎம்சி என மாற்றியமைக்கப்படுகிறது.
தமிழகம்- கர்நாடகம் எல்லையில் அமைந்துள்ள நீர் அளவு நிலையமான பிலிகுண்டுலு பகுதியில் 177.25 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கான மாத அளவு கணக்கிடப்படும்.
நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளிக்கிறது. இதனால் எந்த மாநில அரசும் கேள்வி எழுப்ப முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு திட்டத்தை (மேலாண்மை வாரியம்) 6 வாரங்களில் (தீர்ப்பு வெளியான தேதியில் இருந்து) அமைக்க வேண்டும். இந்த அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது. அப்போதுதான் மாதந்தோறும் நீர் பங்கீடு சுமூகமாக நடைபெறும். இந்த நீர் பங்கீடு 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கர்நாடகம் அளிக்க வேண்டும்.
நீர் வளத்தில் ஏற்பட்டுள்ள கடும் பற்றாக்குறையால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரை குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தத் தீர்ப்பில் எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை. கர்நாடக அரசு 2007-ம் ஆண்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு பகுதி அளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யபடுகின்றன என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.