அரசு பள்ளிகளில் இலவச வை-ஃபை: தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு
சென்னை, கோவை உட்பட 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனம் மூலம் 318 அரசு பள்ளிகளில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு பள்ளிகளில் இலவசமாக வை-ஃபை வசதியை ஏற்படுத்த ஆக்ட் பைபர்நெட் என்ற தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 312 அரசு பள்ளிகளில் இலவசமாக வை-ஃபை வசதி அமைக்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் பாடம் சம்பந்தமான மற்றும் பொது அறிவு தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். முதல்கட்டமாக 4 மாவட்டங்களுக்கு ஏற்படுத்தப்படும் வசதி பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
புதிய பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில் அதுதொடர்பான பணிகள் பிப்ரவரி இறுதியில் முடிவடைந்துவிடும். மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் தயாராகிவிடும்.
முதல்கட்டமாக வரும் கல்வி ஆண்டில் (2018-19), 1,6,9, 11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். புதிய பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும்.
தற்போது ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருப்பதை போல் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் 96 பள்ளிகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஒதுக்கப்படும். வரும் காலத்தில் 500 பள்ளிகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.