பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்
2017-2018-ம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி, நடமாடும் புத்தக கண்காட்சியை சென்னை கோடம்பாக்கம், க.கணபதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயவர்தன் எம்.பி., தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
நாளொன்றுக்கு 12 மாவட்டங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நடமாடும் புத்தக கண்காட்சியை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். புத்தகங்களில் வருகிற அறிஞர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மாணவர்கள் வலம் வருவதற்கும், சிறந்த கல்வியாளர்களாகுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கும் இது உந்துகோலாக அமையும். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
புதியதாக உதவி மையம் (ஹெல்ப்-லைன்) கொண்டு வரப்பட இருக்கிறது. மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது என்ன பாடம் எடுத்து படிக்கலாம், கல்லூரிக்கு செல்லும்போது எந்த மாதிரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பான பல்வேறு தகவல்களை அதில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சந்தேகங்கள் மற்றும் தேர்வு பயம் ஆகியவற்றையும் இந்த உதவி மையம் மூலம் சரி செய்வோம். புதிய மாற்றங்களை இந்த அரசு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. மாணவர்கள் சீருடையை பொறுத்தவரையில், தனியாரை மிஞ்சும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் எந்த வகுப்பு மாணவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டில் (2018- 2019-ம் கல்வியாண்டில்) 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டுக் குள் மற்ற 8 வகுப்புகளுக்கும் என அனைத்து வகுப்புகளுக் கும் புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுவிடும். மூச்சு நின்றால் மரணம் என்று சொல்வார்கள். அதேபோல், முயற்சி இல்லை என்றாலும் மரணம் தான். எனவே மாணவர்கள் எதிலும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்