மூலிகைகளின் மகத்துவத்தை விளக்கும் சித்த மருத்துவக் கண்காட்சி 18ம் தேதிவரை இலவசமாக பார்வையிடலாம்
சித்த மருத்துவக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சென்னை அரும்பாக்கத்தில் மூலிகைகளின் மகத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவக் கண்காட்சி 15.02.2018 வியாழக்கிழமை தொடங்கியது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் 'நலம் வாழ்' என்ற சித்த மருத்துவக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. சித்த மருத்துவப் பரிசோதனை, சித்தர்கள் வரலாறு, அவர்கள் பயன்படுத்திய கருவிகள், சித்த மருத்துவத்தில் நோய் கணிக்கும் முறைகள், மருத்துவக் குறிப்புகள், விளக்கங்கள், பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்களின் முக்கியத்துவம், தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல் விளக்கங்கள், சித்த மருத்துவத்தின் பார்வையில் நஞ்சுகளும் அதன் முறிவுகளும் , யோகா, வர்மம் செயல்முறை விளக்கம், பாரம்பரிய நெல் கண்காட்சி ஆகியவை இந்த சித்த மருத்துவக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
600 வகையான மூலிகைகள்: மருத்துவ குணமிக்க 600 வகை மூலிகைகளின் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் இம்பூறல், இனிப்புத் துளசி, இருமல், மார்ப்புச் சளியைப் போக்கும் ஆடாதொடை, நஞ்சு முறிவுகளுக்குப் பயன்படும் ஆடு தீண்டாப்பாளை, வாய்ப்புண்ணை ஆற்றும் ஆல் மூலிகை, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும் ஆணை நெருஞ்சில், கண் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும் நந்தியா வட்டம், களா, தோல் நோய்களுக்குப் பயன்படும் குப்பைமேனி, உடல் வலுப்பெற உதவும் சீந்தில், எலும்பு முறிவுக்குப் பயன்படுத்தப்படும் கால்சியம் சத்துமிக்க எலும்பு ஓட்டி மரம், ராசி மூலிகைகளான சொர்க்க மரம், வன்னி மரம் ஆகியவை உள்ளிட்ட மருத்துவ குணம் மிக்க பல்வேறு மூலிகைகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
அரிய வகை முடவன் ஆட்டுக்கால் கிழங்கு: கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் அரியவகை முடவன் ஆட்டுக்கால் கிழங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இந்த முடவன் ஆட்டுக்காலை ரசமாக்கி (சூப்) குடித்து வந்தால் மூட்டுவலி, செரிமானப் பிரச்னை, எலும்பு அடர்த்தி குறைவு, உடல் வலி உள்ளிட்ட நோய்கள் நீங்கும். மேலும், சிறந்த கிருமி நாசினியாகவும் இந்தக் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
55 அரங்குகள்: சித்த மருத்துவத்தில் உயிர்நாடியாக விளங்கும் வர்ம மருத்துவம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களைக் கொண்டு குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரித்தல், பெண்களுக்கான நோய்த் தடுப்பு, அதற்கான சிகிச்சை, இலவச சித்த மருத்துவ முகாம், யோகா, மூச்சுப் பயிற்சி, மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சி, வீட்டு மாடியில் மூலிகைத் தோட்டம், மூலிகைகளைக் கொண்டு அழகு சாதனப் பூச்சுகள் தயாரிப்பு, பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய உணவுகள், மண் பாத்திரங்கள் ஆகியவை என மொத்தம் 55 அரங்குகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மருந்து தயாரிப்புக் கருவிகள்: இக் கண்காட்சியில் சித்த மருந்துகள் தயாரிக்கப்பயன்படும் இடிகருவி, கல்வம், புடம்போடும் கருவி, வாளை இயந்திரம் என 26 கருவிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
பிப்.18-ஆம் தேதி வரை: வியாழக்கிழமை தொடங்கிய இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) வரை நடைபெற உள்ளது. கண்காட்சி தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 1 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
நமது பாரம்பரியம் குறித்து அறிய உதவும் கண்காட்சி: இந்தக் கண்காட்சி குறித்து சென்னை வானகரத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் கூறுகையில், 'நாளுக்குநாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் உள்ள பொருள்கள், எளிதில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு, நமது பண்டையகால சமையல் பாத்திரங்கள், உணவுமுறைகள், மனஅழுத்தத்தைப் போக்கும் அரங்கு ஆகியவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது பாரம்பரியம் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் இந்தக் கண்காட்சி பெரும் உதவியாக உள்ளது என்றார்.