அதிரடி மாறுதல்களுடன் வருகிறது ‘சென்டாக் கவுன்சிலிங்’
புதுச்சேரி: சென்டாக் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த, இந்தாண்டு பல்வேறு அதிரடி முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அத்துடன், மருத்துவம், பொறியியல் படிப்புகளோடு, சட்டப் படிப்பிற்கு கவுன்சிலிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு, தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு காலி இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், போலிச்சான்றிதழ் கொடுத்து தமிழக மாணவர்களை சேர்ந்ததாக புகார் எழுந்தது.
மோசடி
இது குறித்த விசாரணையில் மோசடி நடந்தது உறுதியானதால் போலிச் சான்றிதழ் வழங்கிய வருவாய்த் துறை அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்ததால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி செய்து 6 மாணவர்கள், அவர்களது தந்தை, துணை தாசில்தார்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தீவிர கண்காணிப்பு
இதன் எதிரொலியாக கடந்தாண்டு மாணவர் சேர்க்கை தீவிர கண்காணிப்பில் நடந்தது. வருவாய் துறை அதிகாரிகள் வழங்கிய சான்றிதழ்கள், தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. கல்வித் துறை செயலர் ராகேஷ்சந்திராவே நேரடியாக களம் இறங்கி, மாணவர் சேர்க்கையை நடத்தினார்.
புதிய குழு
வரும் கல்வியாண்டிற்கான மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த புதிய குழுவை அமைக்கும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இக்குழுவின் சேர்மனாக கல்வித் துறை செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இக்குழுவில் சுகாதாரத்துறை செயலர், இயக்குனர், உயர்கல்வி இயக்குனர், அரசு பொறியல் கல்லூரி, காமராஜர் பொறியியல் கல்லூரி, ராஜிவ்காந்தி ஆயுதர்வேத கல்லூரி உட்பட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கவுன்சிலிங் நடத்தும் வழிமுறைகள், விதிமுறைகள் குறித்து ஆராய்ந்து முடிவெப்பர்.
சட்டப்படிப்பு
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 வகுப்பு தேர்வில் பெற்றவர்கள் இப்படிப்பில் நேரடியாக சேரலாம். இந்த எல்.எல்.பி.,படிப்பிற்கு வரும் 2016-17 கல்வியாண்டில் இருந்து முதல் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முடிவெடுத்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், போலி சான்றிதழ் புகார் எதிரொலியால் கடந்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் புகைப்படத்துடன் மாணவர் சேர்க்கை பட்டியல் சென்டாக் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனால் இந்தாண்டு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.,மட்டுமின்றி பி.டெக்., பல் மருத்துவம், நர்சிங்.,பிசியோதெரபி உட்பட அனைத்து படிப்புகளிலும் சேர்ந்த மாணவர்களின் புகைப்படத்துடன் வெளியிடப்பட உள்ளது. இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர மாணவர்களுக்கும் வழங்கப்படும் அட்மிட் கார்டிலும் புகைப்படம் இடம் பெற உள்ளது. இதற்கான சாப்ட்வேர் மேம்படுத்தும் பணி விரைவில் முடுக்கி விடப்பட உள்ளது.
சென்டாக் குழுவில் யார்...யார்?
இந்தாண்டு சென்டாக் குழுவில், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் கோவிந்தராஜ் கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி, மெக்கானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பழனிராஜா இணை கன்வீனராகவும், மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, ரேடியோலஜி துறை தலைவர் ஜோனாத்தனன் டேனியல், மருத்துவம், பொறியியல், லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.