பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம் தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை
தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி எஸ்.எஸ்.எல்.சி.ஹால் டிக்கெட்டில் கூறியிருப்பதாவது:-
மாணவர்கள் தேர்வு எழுத வரும்போது சீட்டினை அறைக்கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். செல்போனையோ, தொலை தொடர்பு சாதனங்களையோ தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் கட்டாயம் கொண்டு வரக்கூடாது. பிப்ரவரி 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை செய்முறைத்தேர்வு தேர்வு மையத்திலேயே நடைபெற உள்ளது. தேர்வர்கள் விடைத்தாளில் எந்தக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாவையோ அல்லது வண்ண பென்சில்களையோ பயன்படுத்தி எழுதவோ அல்லது அடிக்கோடு போடவோ கூடாது.
ஆள் மாறாட்டம்
மாணவர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை கிழிக்கவோ அல்லது தனியாக பிரித்து எடுத்துச்செல்லக்கூடாது.
மாணவர்கள் துண்டுத்தாள் வைத்திருந்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், துண்டு தாளைபார்த்து எழுதவோ கூடாது. விடைத்தாளை பரிமாறிக்கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கீனச்செயல்களாக கருதப்படும். எனவே அதற்கு உரிய தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். எனவே தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் யாரும் ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.