ஆன்-லைனில் ஆவணப் பதிவுக்கு தாமதம் கூடாது: தமிழக அரசு உத்தரவு
ஆன்-லைனில் ஆவணப் பதிவை மேற்கொள்ளும் போது, பொது மக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காக்க வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இணைய வழியிலான ஆவணப் பதிவு முறை தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இணையதள வேகம் குறைவு உள்பட சில பிரச்னைகளால் ஆவணப் பதிவில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டப் பதிவாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை பதிவுத் துறைத் தலைவர் குமரகுருபரன் புதன்கிழமை வழங்கியுள்ளார். அதன் விவரம்:
பதிவு செய்வதற்கு முன்பாக, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை முன்சரிபார்ப்பு செய்திட வேண்டும். இதன்பின்பு, ஆவணப் பதிவை 10 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். பொது மக்கள் ஆவணப் பதிவுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என்பதை மாவட்டப் பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதா என்பதையும், ஆவண எழுத்தர் மற்றும் பொது மக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படுகிறதா என்றும் மாவட்டப் பதிவாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., போன்ற இணைப்புகள் ஒழுங்காக இயங்குகிறதா அவற்றில் பழுது ஏற்படும் போது தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அலுவலர்களுக்குத் தெரிந்துள்ளதா என்பதை மாவட்டப் பதிவாளர்கள் ஆய்வு செய்திட வேண்டும். ஒவ்வொரு மாவட்டப் பதிவாளரும் தங்களது எல்லைக்கு உட்பட்ட சார்பதிவு அலுவலகங்களில் ஏதேனும் நான்கு அலுவலகங்களுக்குத் தினமும் தவறாது சென்று பணிகளை கண்காணித்திட வேண்டும்.