நீட் தேர்வு தகவல்கள் தமிழில் வருமா? : தெளிவாக பதிவு செய்ய எதிர்பார்ப்பு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடக்கும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. தேர்வில், ஆங்கிலம், ஹிந்தியுடன், ஒன்பது மாநில மொழிகளில் எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழியில் எழுதவும், சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழகத்தில், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 'நீட்' தேர்வை எழுத வாய்ப்புள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், தமிழ் வழியில் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோருக்கு, எளிதில் புரியும் வகையில், 'நீட்' தேர்வு தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:ஆங்கிலம் மற்றும் ஹிந்தி குறிப்பேட்டை படித்து, 'நீட்' தேர்வு குறித்து, தெளிவு பெறுவது கடினம். மற்ற மாநில மாணவர்களுக்கு, ஹிந்தி மொழி சரளமாக தெரியும் என்பதால், அவர்கள், ஹிந்தியில் 'நீட்' தேர்வை படித்துக் கொள்வர். ஆனால், தமிழக மாணவர்கள், ஹிந்தியை படிக்க வழியில்லை.எனவே, 'நீட்' தேர்வு தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும். இதற்கு, தமிழக சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.