புதிய துணைவேந்தர் யார்? : தேடல் குழு நாளை முடிவு!
புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு கூட்டம், நாளை சென்னையில் நடக்கிறது. அண்ணா பல்கலையின் துணைவேந்தராக இருந்த, ராஜாராம் பதவிக்காலம், மே, 2016ல் முடிந்தது. அதனால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்களை, கவர்னர் நியமித்தார். இரண்டு குழுக்களும், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யவில்லை.உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, சிர்புர்கர், தமிழக ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன் மற்றும், ஐ.ஐ.டி., பேராசிரியர், ஞானமூர்த்தி ஆகியோர் அடங்கிய தேடல் குழு, மூன்றாவதாக அமைக்கப்பட்டது. இந்த குழு, பிப்., 2 வரை விண்ணப்பங்களை பெற்றது; 150 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, குறைந்த பட்ச தகுதி பெற்ற விண்ணப்பங்கள், தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல்குழு கூட்டம், நாளை நடக்கிறது. இதில், தேடல் குழு ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று பேரும் பங்கேற்க உள்ளனர். அவர்கள், புதிய துணைவேந்தர் குறித்த பட்டியலை தயார் செய்வர் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.