இந்தியாவில் படியுங்கள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க புதிய திட்டம்... ரூ.300 கோடி செலவில் களமிறங்குகிறது மத்திய அரசு
வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நம் நாட்டில் படிக்க ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டடி இன் இந்தியா' எனப்படும், 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், உயர்மட்ட அளவில் இறுதி செய்யப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த, 2014ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு தயாரிப்பு
உள்நாட்டில் தயாரிப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை குவிக்கவும், அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, 'டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
கறுப்புப் பணத்தை ஒழிக்க, செல்லாத ரூபாய் நோட்டு திட்டமும், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை உறுதி செய்ய, ஜி.எஸ்.டி.,யும் அமல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்பதை ஊக்குவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 லட்சம் மாணவர்கள்
இதற்காக, 'ஸ்டடி இன் இந்தியா' திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, உயர் மட்டக் கூட்டம் நடத்தப்பட்டு, திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக,தகவல்கள் கூறுகின்றன.இத்திட்டப்படி, இந்தியாவில் உள்ள கல்வி மையங்களில் படிக்க, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒருலட்சம் மாணவர்களை, ஒவ்வொரு ஆண்டும் சேர்க்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: 'இந்தியாவில் படியுங்கள்' திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முதற்கட்டமாக, உலகின், 10 நாடுகளில் இருந்து மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவில் படிக்க முக்கியத்துவம் தரப்படும்.
கடந்த, 2015 - 16ம் கல்வியாண்டில், இந்தியாவில் உள்ள கல்வி மையங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 45 ஆயிரத்து, 424 மாணவர்கள் படித்தனர். இவர்கள், 165 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இந்த நாடுகளில், முதல், 10 நாடுகள், புவியியல் அடிப்படையில் நமக்கு நெருக்கமானவை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறைந்த செலவில் கல்வி
இந்தியாவில் தரம் வாய்ந்த கல்வியை குறைந்த செலவில் பெற முடியும் என்பதை, உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் படியுங்கள்' திட்டம் அமல்படுத்தப்படுவதாக,அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., உட்பட, 115 கல்வி மையங்கள், சிறப்பான கல்வியை வழங்குவதில், உலகளவில் புகழ் பெற்றவையாக உள்ளன.
என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி மையம், என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ரேங்கிங் பிரேம்வொர்க் ஆகியவற்றில் சேர்ந்து படிக்கவும், வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில், மிக குறைந்த செலவில் கல்வி கற்க முடியும். ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க, குறைந்தபட்சம், 25 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்தியாவில், அதே படிப்பை முடிக்க, மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதும்.