10 மணிநேரம் பந்துவீசி மாணவன் சாதனை
நெல்லையில் கல்லுாரி மாணவர் இடதுகையை கயிற்றால் கட்டிக்கொண்டு வலது கையால் தொடர்ந்து பத்து மணி கிரிக்கெட் பந்துவீசி சாதனை படைத்தார்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் செந்தில்வேல்குமார் 20.நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்.கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவர் நேற்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார். காலை 7.20 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் கிரிக்கெட் பந்து வீச துவங்கினார்.மாலை 5.45 மணிவரையிலும் தொடர்ந்து பத்து மணி நேரம், 450 ஓவர்கள், 2 ஆயிரத்து 700 பந்து வீசினார். விதிமுறைகளின்படி ஒரு மணிநேரத்திற்கு 2 நிமிடங்கள் மட்டும் குளுக்கோஸ் அருந்த நேரம் எடுத்துக்கொண்டார். அவரது உடல் நிலையும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டது.அதனை மற்றவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்தனர். இதற்காக அவர் தமது இடது கையின் மணிக்கட்டை, கயிற்றால் பின்புறமாக கட்டிக்கொண்டு,வலது கையால் மட்டும் பந்து வீசினார்.இதனை வில் மெடல் ஆப் வேர்ல்ட் அமைப்பின் நிர்வாகிகள் கலைவாணி, தஹ்மிதா பானு, சீனி மீரான் ஆகியோர் கண்காணித்தனர்.பத்து மணிநேரம் தொடர்ந்து பந்து வீசி மாணவன் சாதனை படைத்தார்.அவரை கல்லுாரி முதல்வர் முகமது சாதிக், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகவிளையாட்டுத்துறை தலைவர் சேது, பேராசிரியர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.