ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைக்கு வந்தது : 42 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று இலவசம்
தமிழகம் முழுவதும், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவு செய்யும் வசதி, நேற்று நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை, முதல்வர், பழனிசாமி துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும், ஆன்லைன் வாயிலான பத்திரப்பதிவுக்காக, 'ஸ்டார்- 2.0' என்ற சாப்ட்வேர், 176 கோடி ரூபாயில் வாங்கப்பட்டு உள்ளது. அது பொருத்தப்பட்டு, பதிவுத் துறை சார்பில், tnreginet.gov.in என்ற புதிய இணையதளம், சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் வாயிலான பத்திரப்பதிவு திட்டத்தை நேற்று, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். உடன், இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது.
ஆன்லைன் முறையின் சிறப்பு அம்சங்கள்:
பொதுமக்கள் தாங்களாகவே, வீட்டில் இருந்தபடியே, இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மக்கள் இணையவழியே அளிக்கும் விபரங்களை, பதிவுத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே சரி பார்க்க முடியும் கட்டணமில்லா வில்லங்க சான்று சேவை, 30 ஆண்டுகளில் இருந்து, 42 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணம் போன்றவற்றை, ஆன்லைன் முறையிலேயே பொதுமக்கள் செலுத்தலாம் பத்திரப்பதிவின் ஒவ்வொரு நிலை குறித்த தகவலும், குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும் பதிவுக்கு பின், பட்டா மாறுதல் மனுக்கள் உடனடியாக வருவாய் துறைக்கு அனுப்பப்படும் ஆன்லைன் பத்திரப்பதிவு தொடர்பான சந்தேகங்களை, 1800 102 5174 என்ற, கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவித்து, அதிகாரிகளின் பதில்களை பெறலாம்.