அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் புதிய சீருடை வழங்கலாம்: கல்வித்துறை பரிசீலிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் சீருடை மாற்றம் என்பது பெற்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தாண்டு 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தலாம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளி்ல் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மெருன் மற்றும் லைட் மெருன் வண்ணங்களைக் கொண்ட சீருடைகள் தற்போது உள்ளன. இதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறுவோருக்கு 4 இணை சீருடைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான துணிகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் இருந்து வாங்கப்பட்டு, சமூக நலத்துறையின் மூலம் சீருடைகள் தைக்கப்படுகின்றன.
564.02 லட்சம் மீட்டர் துணி
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இதே நிறத்திலான சீருடைகளைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை அல்லது அவர்கள் தனியான சீருடைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் 45 லட்சத்து 37 ஆயிரத்து 344 மாணவர்களுக்காக 564.02 லட்சம் மீட்டர் துணியை துணி நூல் துறை வழங்கி வருகிறது.
இந்நிலையில் 9,10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப்போல் புதிய சீருடையை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி உடைகளைத் தயாரித்து, மாணவர்களுக்கு அணிவித்து சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம், அமைச்சர் செங்கோட்டையன் ஒப்புதல் பெற்றுள்ளார். இந்த புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
துணி, தையல் கூலி அதிகம்
தமிழக அரசு, மதிய உணவுத் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்குகிறது.
மற்றவர்கள், கடைகளில் சொந்த செலவிலேயே துணி எடுத்துத் தைக்கின்றனர். தற்போது துணியின் விலையும் தைப்பதற்கான செலவும் அதிகம். இதனால் பெரும்பாலான பெற்றோர், ஆண்டுதோறும் துணி எடுப்பதில்லை. ஒரு ஆண்டு எடுத்து தைக்கும் சீருடை உடுக்க முடியாமல் போகும்போது, அடுத்த ஆண்டு பாதியில் கூட புதிய சீருடையை பிள்ளைகளுக்கு வாங்கித் தருவார்கள்.
இந்நிலையில், இருவேறு வகையிலான சீருடைகளை நான்கு வகுப்புகளுக்கும் இந்தாண்டே அறிமுகப்படுத்தினால், அது மாணவர்களின் பெற்றோருக்கு சிரமத்தைத் தரும். 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இந்தாண்டும், அடுத்தாண்டு முதல் நான்கு வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்தலாம். இது ஏழை மாணவர்களின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும். கல்வித்துறை இதை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், அரசால் இலவசமாக வழங்கப்படும் சீருடையின் அளவு, வழங்கப்படும் காலம் இவற்றால், சிரமம் ஏற்படுவதாக அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தனியாக செலவு ஆகும்
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘அரசால் வழங்கப்படும் இலவச சீருடை, புத்தகங்களுடன் ஜூன் மாதத்தில் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்தான் கிடைக்கிறது. சரியான அளவில் இருக்காது என்பதால், மீண்டும் ஒருமுறை டெய்லரிடம் கொடுத்து தைக்க வேண்டியதுள்ளது. இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியுள்ளது’’ என்றனர்