மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
இந்த ஆண்டு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘நீட்’ நுழைவுத் தேர்வை வலிந்து திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துவிட்டது. தற்போது, மே மாதம் 6-ந்தேதி ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் மாதம் 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டபோது, ஏராளமான குளறுபடிகள் நடந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கேள்விகள் வினாத்தாள்களில் இடம்பெற்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழியைவிட குஜராத், மராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததால் ‘நீட்’ தேர்வையே ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவியரிடம் சோதனை என்ற பெயரால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க செயல்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாயின.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர்.
எனவே, இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும். மேலும் ‘நீட்’ தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.