தண்ணீர் பஞ்சத்தில் இருந்து உலகை காப்பாற்றும் 12 வயது சிறுமி!
நாம் தினமும் குளிக்கும் போது, எவ்வளவு தண்ணீரை உபயோகிக்கிறோம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? ஷவரில் குளிக்கும் போது, நாம் 65-80 லிட்டர் தண்ணீரை உபயோகிக்கின்றோம். அதில் பல லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். ஆனாலும், அவசர உலகில் வேறு வழியின்றி ஷவரைதான் பயன்படுத்துகிறோம். இதனால், ஒரு மனிதன், ஒரு நாளைக்கு, இரு வேளை குளியல் போட்டால், 150 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஏன், "வீணாகிறது" என்று கூட சொல்லலாம்.
இப்படி நம்மைப் போலவே கவலை மட்டும் பட்டுக் கொண்டிருக்காமல், இதற்கான தீர்வைப் பற்றி சிந்தித்த 12 வயது சிறுமி ஷ்ருஷ்டி நேர்கர், வித்தியாசமான குழாய் முனைகளைக் கொண்ட புதுவகை ஷவர் ஒன்றை உருவாக்கியுள்ளார். நாசிக் நகரைச் சேர்ந்த ரச்னா வித்யாலயா எனும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர், தனது தந்தையுடன் கார் வாஷுக்கு சென்ற போதுதான் இதற்கான யோசனை மலர்ந்துள்ளது. "வெறும் 2 லிட்டர் தண்ணீரில் கார் கழுவப்படும்" என்ற அறிவிப்பை கேட்ட ஷ்ருஷ்டி, இது குறித்து அவர்களிடம் வினவியுள்ளார்.
பிரத்யேகமான தெளிப்பான்களைக் கொண்டு கழுவுவதாக அவர்கள் கூற, தன் யோசனையை தன் தந்தை நரேந்திர நேர்கரிடம் கூறியுள்ளார் ஷ்ருஷ்டி. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் துறை ஆசிரியராக பணியாற்றும் நரேந்திர நேர்கர், தனது மகளுக்கு ஊக்கமளிக்க, ஷ்ருஷ்டி நான்கு மாடல்களுக்குப் பின், ஐந்தாவது மாடலை தேர்வு செய்துள்ளார். மின் கம்பிகளாலான குழாய்கள் மற்றும் பி.வி.சி குழாய்களை பயன்படுத்திப் பார்த்த ஷ்ருஷ்டி, இறுதியாக வளையும் குழாய்களைக் கொண்டு இந்த ஷவரை உருவாக்கியுள்ளார்.
பொதுவாக 80 லிட்டர் தண்ணீர் வரை உபயோகிக்கும் ஒரு மனிதன், இந்த ஷவரில் குளித்தால், வெறும் 15 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். இந்த ஷவரை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் திபேந்தர் சிங், ஷ்ருஷ்டியை பாராட்டியது மட்டுமல்லாமல், இந்த முறையால் சேமிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு, நாசிக் நகரின் 17 லட்சம் மக்கள், 34 நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஷவரின் பேடன்ட் உரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஷ்ருஷ்டி, தனது அடுத்த இலக்காக, மனிதர்கள் கீழில்லாத போது, தண்ணீரை வெளிவிடாத வகையில் ஒரு சென்சாரை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இவருடைய இந்த கண்டுபிடிப்பை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்தால், கற்பனைக்கு எட்டாத அளவு தண்ணீரை சேமித்து, தண்ணீர் பஞ்சத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
-ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)