குரூப் 4 தேர்வு நடைமுறையில் மாற்றம் : முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
நாளை நடக்கும் குரூப் 4 தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கமூன்று முக்கிய மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., உள்ளிட்ட 9,351 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நாளை நடக்கிறது. இதற்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளில் மூன்று முக்கிய அம்சங்களை இணைத்து முறைகேடுகளை தடுக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. விடைத்தாள் படிவத்தில் தேர்வரின் புகைப்படம், பதிவு எண் எழுத தேவையில்லை. அவை அச்சடிக்கப்பட்டு இருக்கும்.அவர்கள் விடைத்தாள் படிவத்தில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஐந்து விடைகள் இடம் பெற்றிருக்கும். விடை தெரிந்தால் சரியானதற்கான வட்டத்தை குறிக்க வேண்டும். இல்லையெனில் விடை தெரியவில்லை என்பதற்கான வட்டத்தை குறிக்க வேண்டும். தேர்வு முடிந்த பின் விடையளிக்கப்படாத வினாக்களின் எண்ணிக்கையை எழுதி தேர்வு அறை மேற்பார்வையாளரின் ஒப்புதல் கையெழுத்திட்டு விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும், என, நடைமுறைகள் முதல்முறையாக அமல்படுத்தப்படுகின்றன.
அரசுத்துறை தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்த்து திறன்மிக்க ஊழியர்களை தேர்வு செய்யும் நோக்கில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் இதனை நடைமுறைப்படுத்தி உள்ளது. தேர்வு முடியும் வரை அறை மேற்பார்வையாளர் அலைபேசியை அணைத்தே வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.