தமிழ் வளர்ச்சித்துறை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ் புத்தாண்டு தினத்தன்று, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சிறந்த தமிழ் அமைப்புக்கு, தமிழ்த்தாய் விருது; மரபு செய்யுள் மற்றும் கவிதை படைப்பாளிக்கு, கபிலர் விருது; கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் பதிப்பாளருக்கு, உ.வே.சா., விருது. கம்பர் குறித்து திறனாய்வு செய்பவருக்கு, கம்பர் விருது; சிறந்த இலக்கிய பேச்சாளருக்கு, சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்படுகிறது.தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றுபவருக்கு, உமறுப்புலவர் விருது; தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்ப்பாளருக்கு, ஜி.யு.போப் விருது. இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்பவருக்கு அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கு, இளங்கோவடிகள் விருதும் தரப்படுகிறது.மகளிர் இலக்கியங்களை படைக்கும் பெண்ணிற்கு, அம்மா இலக்கிய விருது; பிற மொழி படைப்புகளை, சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும், 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், தமிழ் புத்தாண்டு தினத்தன்று வழங்கப்பட உள்ளன.இந்தாண்டு, இந்த விருதுகள் பெற தகுதியானோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை, tamilvalarchithurai.com என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், தன் விபரக் குறிப்புகளுடன், இரண்டு நிழற்படம், எழுதிய நுால்கள் விபரத்துடன், அந்நுால்களில் ஒரு படியை, வரும், 28க்குள், சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள, தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும்.