மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க அரசு முடிவு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 2020-21-ஆம் ஆண்டுக்குள் இளநிலை மருத்துவக் கல்வி இடங்களை 85,525-ஆகவும், முதுநிலை இடங்களை46,558-ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையை மேம்படுத்த நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனிடையே, ரூ.14,930 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அவற்றில் புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டமும் அடங்கும்.
இந்நிலையில், 2020-21-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 52,000 இடங்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30,000 இடங்களும் இருந்தன. தற்போது அவை முறையே 68,125 இடங்களாகவும், 38,500 இடங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், அவற்றை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகியவற்றின் மூலமாக அதைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.