மருத்துவ கல்லூரி கேட்டு கடிதம்
நாடு முழுவதும், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி வீதம், புதிதாக, 24 மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்தது.தமிழகத்தில், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி இருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவ படிப்பு இடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான். இங்கு, 22 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், ஒரு பல் மருத்துவக் கல்லுாரியை துவக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளில், தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 'மத்திய அரசு அமைக்கவுள்ள, மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, தமிழகத்தில் துவங்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு, ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதை, தமிழக அரசு வரவேற்கிறது. தமிழகம், மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது.ஆனாலும், ராமநாதபுரம், விருதுநகர் போன்ற, 13 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் இல்லை. எனவே, மத்திய அரசு அமைக்கும் புதிய மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்று, இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.