சென்னை ஐஐடியில் ரயில் ஆராய்ச்சி மையம்
நவீன ரயில் போக்குவரத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் ரயில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வேயுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, ரயில் ஆராய்ச்சி மையத்தில் நவீன, பாதுகாப்பான ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யும் வகையிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேராசிரியர்கள், ரயில்வே அதிகாரிகள் அடங்கிய திட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ள பேராசிரியர்களுக்கு ரயில் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அளிக்கப்பட உள்ளன.
புதிய படிப்புகள்: மேலும், ரயில் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலைப் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்களும் நவீன ரயில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவர் என ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.