ஸ்மார்ட் ரேஷன் கார்டு: 10 நாள் மட்டுமே கெடு
ரேஷன் கடைகளில் உள்ள, 'ஸ்மார்ட் கார்டு'களை, 10 நாட்களில் வாங்க வேண்டும் என்றும், இல்லையேல், இனிமேல் கிடைக்காது என்றும், உணவு துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில், காகித கார்டுக்கு பதில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அச்சகத்தில் இருந்து, உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகம் வாயிலாக, ரேஷன் கடைக்கு, ஸ்மார்ட் கார்டு அனுப்பப்படுகிறது. அந்த கார்டை, உரியவரிடம் வழங்குவதற்கு முன், ரேஷன் ஊழியர்கள், கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், பதிவு செய்து, செயல்பட செய்ய வேண்டும். அப்போது தான், பொருட்கள் வாங்க முடியும். ஆனால், கடைக்கு அனுப்பியுள்ள கார்டை வாங்காதது, ஊழியர் பதிவு செய்யாமல் வழங்கியது என, இதுவரை, மூன்று லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டு தயாராக இருக்கும் விபரம், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வாங்காமல் அலட்சியமாக உள்ளனர். அந்த கார்டை வாங்காதவர்களும், கார்டை வாங்கியும், பதிவு செய்யாமல் உள்ளவர்களும், அவற்றை, பிப்., 19க்குள் வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அந்த கார்டுகள், ரேஷன் கடையில் இருந்து, அலுவலகத்திற்கு திரும்ப அனுப்பப்படும்.அங்கு கார்டு கேட்டு வந்தால், தீவிர விசாரணை நடத்தி தான் வழங்கப்படும். அதற்கு இடம் தராமல், உடனே, ரேஷன் கடையில் உள்ள தங்களின் ஸ்மார்ட் கார்டை, உரியவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.