B.E. முதல் பருவத் தேர்வு: 32 சதவீத மாணவர்கள் மட்டுமே முழு தேர்ச்சி: 20 கல்லூரி மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைப்பு
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதல் பருவத் தேர்வில் 31.93 சதவீதம் அதாவது தேர்வெழுதிய ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரில், 36 ஆயிரத்து 179 மாணவ, மாணவிகள் மட்டுமே அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2017 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. முடிவுகள் அந்தந்த பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு, அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பதிவு செய்த செல்லிடப்பேசி எண்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத் திட்டம்: தேர்வெழுதியோர் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் பருவத் தேர்வைச் சந்தித்தவர்கள். முதல் பருவ பாடத் திட்டத்தில் முன்னர் இருந்த 'சி', 'சி பிளஸ்' 'பி பிளஸ்' பாடங்கள் கைவிடப்பட்டு, புதிதாக அவர்களுக்கு 'பைத்தான் புரோகிராம்' என்ற பாடம் சேர்க்கப்பட்டிருந்தது.
இதனால், முதல் பருவத் தேர்வு எழுதிய இந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பல்கலைக்கழகத்தின் துறைகளாக இயங்கி வரும் கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 4 உறுப்புக் கல்லூரி மாணவர்களின் முடிவுகள், மோசமாகவே இருந்தன. 65 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட 570 இணைப்புக் கல்லூரி பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உறுப்புக்கல்லூரிகளைவிட மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் தேர்வெழுதிய 1,13,298 பேரில், 36,179 மாணவ, மாணவிகள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 31.93 மட்டுமே.
கணிதம், இயற்பியல், வேதியியலில் தேர்ச்சி குறைவு: பொறியியல் கணிதத் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 869 பேரில் 49 ஆயிரத்து 288 பேரும் பொறியியல் இயற்பியல் பாடத்தில் 59 ஆயிரத்து 606 பேரும் பொறியியல் வேதியியல் பாடத்தில் 66 ஆயிரத்து 684 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முடிவுகள் நிறுத்தி வைப்பு: மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தவுடன் அவர்களிடமிருந்து சேர்க்கைக் கட்டணத்தை பொறியியல் கல்லூரிகள் வசூலித்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மாணவருக்கும் கல்லூரி சேர்க்கைக்கான பதிவு மற்றும் அங்கீகாரத்தை பல்கலைக்கழகம் வழங்கும்.
இவ்வாறு சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்தாத 20 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
பல்கலைக்கழகத்துக்குஓஈ கட்டணம் செலுத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் சில பொறியியல் கல்லூரிகள் இதுபோன்று தாமதம் செய்கின்றன.
இம்முறை மொத்தமுள்ள 570 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் 550 கல்லூரிகள் மட்டுமே இந்தக் கட்டணத்தை முழுமையாக பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தியுள்ளன.
மீதமுள்ள கல்லூரிகள், மாணவர் சேர்க்கை முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் இன்னும் கட்டணத்தைச் செலுத்தவில்லை. எனவே, அந்தக் கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தைச் செலுத்திய பிறகே, அவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.