நியூட்ரினோ மையத்தால் மாணவர்களுக்கு பயன்
தேனி மாவட்டம் தேவாரத்தில் அமையும் நியூட்ரினோ மையத்தால் ஆய்வு மாணவர்களுக்கு பயனுள்ளதுடன், உலகில் மிக முக்கிய இடத்தை இந்தியா வகிக்கும், என, நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குனர் நபா கே.மாண்டல் கூறினார்.
மதுரை யாதவர் கல்லுாரியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் சார்பில் இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு குறித்த முகாம் நடந்தது. முதல்வர் தனசேகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் யசோத்குமார் வரவேற்றார். மத்திய உணவு ஆராய்ச்சி ஆய்வு மைய இயக்குனர் ராம் ராஜசேகர் துவக்கினார்.இந்திய நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குனர் நபா கே. மாண்டல் பேசியதாவது:
கோலார் தங்க சுரங்கத்தில் 1957ல் தங்கம் வெட்டிய போது நியூட்ரினோ தன்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 1965ல் அது குறித்த அறிக்கையை வெளியிட்டனர். இதுவே உலகில் முதல் நியூட்ரினோ குறித்த அறிக்கை. தேனி மாவட்டத்தில் உறுதியாகவும், வலிமையாகவும் பல அடுக்குகளை கொண்டதாக மலைத்தொடர் உள்ளது.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதால் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் இங்கு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, என்றார்.
பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியதாவது:
நாம் உற்பத்தி திறனை வளர்க்க வேண்டும். கச்சா எண்ணெய், நிலக்கரி இறக்குமதி செய்த நாம், இப்போது வெங்காயம், உளுந்து என எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம். நம்மிடம் உற்பத்தி திறன் குறைந்ததே இதற்கு காரணம். நாம் உபயோகிக்கும் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். சூரிய ஒளி, காற்று, தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறோம். சில ஆண்டுகளில் மண்ணில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும், என்றார்.