ஸ்மார்ட் கார்டு இல்லாதோருக்கும் ரேஷன் பொருள் வழங்க அறிவுரை
தமிழகத்தில், 'ஸ்மார்ட் கார்டு' பெறாமல், பழைய ரேஷன் கார்டு வைத்திருக்கும், 1.80 லட்சம் குடும்பங்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், காகித கார்டுக்கு பதில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் பெறப்பட்டன. அவை, ஆங்கிலத்தில் இருந்ததால், அவற்றை தமிழில் மொழி பெயர்க்கும் போது, பிழைகள் ஏற்பட்டன. ஆதாரில், குடும்ப தலைவரின் புகைப்படமும் தெளிவாக இல்லை.இதனால், சரியான விபரங்கள் மற்றும் தெளிவான புகைப்படம் வழங்கும்படி, சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களிடம், உணவு துறை அதிகாரிகள் கேட்டனர்; பலர் தரவில்லை.சிறப்பு முகாம்கள் நடத்தி, அந்த விபரங்கள் பெறப்பட்டன. இதுவரை, மொத்தமுள்ள, 1.94 கோடி கார்டுகளில், 1.80 லட்சம் பேர் சரியான விபரங்களை தரவில்லை. அதில், 1.20 லட்சம் பேர், சென்னை மற்றும் புறநகரில் உள்ளனர். இதையடுத்து, அந்த கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக அச்சிடப்படவில்லை. பழைய கார்டுடன் வருவோருக்கு, பொருட்களை தர முடியாது என, ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சரியான விபரங்களை தராமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு எப்படி அச்சிட முடியும். அச்சிடப்படாத ரேஷன் கார்டுகள் விபரம், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கார்டுகளுக்கு, இம்மாதம் பொருட்கள் வழங்கும் முன், அவர்களை உணவு வழங்கல் உதவி கமிஷனர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல, ஊழியர்கள் அறிவுறுத்த வேண்டும். அங்குள்ள அதிகாரிகள், அவர்களிடம் இருந்து தேவையான விபரங்களை பெற்று, 10 நாட்கள் கழித்து, பொருட்கள் பெறும்படி, ஒரு ரசீது கொடுக்க வேண்டும். அதற்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களின் மாவட்ட அதிகாரிகளிடம், பொருட்கள் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், பழைய கார்டுகளை, ஸ்மார்ட் கார்டுகளாக அச்சிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.