பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய கலெக்டர்
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வின் போது ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கலெக்டர் லதா தமிழ்பாடம் நடத்தியதையடுத்து மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
சிவகங்கை கலெக்டர் லதா நேற்று திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டடங்களை ஆய்வு செய்தார். கட்டடங்களின் சேதம் குறித்து தலைமையாசிரியர் பாலகிருஷ்ணனிடம் கேட்டார். பின் ப்ளஸ் 2 வகுப்பில் நுழைந்த கலெக்டர் தமிழ் பாட வகுப்பு நடந்து கொண்டிருப்பது அறிந்து சுமார் அரை மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.
அப்போதே தேர்வு வைத்து, தாள்களை திருத்தி கையெழுத்திட்டார். தாய்மொழியான தமிழில் படித்து தான் கலெக்டர் ஆனதாகவும் தாய்மொழியில் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்று கொள்ள வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு மிகவும் அவசியம், தாய் மொழியில் கல்வி கற்க தயங்க கூடாது என அறிவுறுத்தினார்.
மதிய நேரம் என்பதால் பள்ளியில் சமைக்கப்பட்ட உணவை ருசி பார்த்தார். கலெக்டரின் திடீர் ஆசிரியர் பணியால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். கலெக்டருடன் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தாசில்தார் கமலா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.