இரு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி
திருச்சியில் நேற்று பசு மாடு ஒன்று, இரு தலைகளுடன் கூடிய ஆண் கன்றை ஈன்றெடுத்தது.
திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த ராமச்சந்திர நகர் அருகேயுள்ள இந்திரா நகர் நத்தர் தெருவைச் சேர்ந்த தம்பதி குமாரசாமி- ராணி. இவர்கள் 15 ஆண்டுகளாக கறவை மாடுகளைப் பராமரித்து பால் கறந்து, கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களது பசு மாடு ஒன்று, நேற்று காலை கன்றை ஈன்றெடுக்க முயற்சித்தது. ஆனால், 2 மணி நேரமாகியும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டது. கன்றுக் குட்டியின் உடல் வெளியே வந்துவிட்ட நிலையில், தலை மட்டும் வெளியே வரவில்லை. இதையடுத்து, கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பசு மாட்டை பரிசோதனை செய்ததில் கன்றுக்குட்டிக்கு இரு தலைகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர், அவர் கன்றுக்குட்டியை லாவகமாக வெளியே எடுத்தார். தலை கனமாக இருப்பதால் கன்றுக்குட்டியால் இயல்பாக நிற்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் கன்றுக்குட்டியை பார்த்துச் சென்றனர். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, “கன்றுக்குட்டி நன்றாகத்தான் உள்ளது, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கால்நடை மருத்துவர் கூறினார்” என்றார்.