கத்தியை சுழற்றிய மாணவர்களுக்கு டி.சி.,
கத்தியை சுழற்றிய போக்கிரி மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நீக்கம் : சென்னை பச்சையப்பன் கல்லுாரி மற்றும் மாநில கல்லுாரியில் படிக்கும், மாணவர்களில் ஒரு தரப்பினர், அவ்வப்போது பஸ்களில் ரகளை செய்வது, சாலைகளில் வன்முறையில் இறங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
ஏற்கனவே நடந்த சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், அதிரடியாக கல்லுாரிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சில மாதங்களாக பிரச்னை இன்றி இருந்த நிலையில், மீண்டும் வன்முறை தலை துாக்கியுள்ளது. பஸ்களில் ரகளையில் ஈடுபட்டவர்கள், தற்போது, ரயில்களில் மோதலில் ஈடுபட துவங்கி உள்ளனர். மின்சார ரயில்களில் சென்ற, கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம், சென்னை, அம்பத்துார் அருகே உள்ள பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலில் கத்தி, வீச்சரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம், கல்லுாரிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 'கத்தியையும், அரிவாளையும் சுழற்றும் போக்கிரி மாணவர்கள், கல்லுாரியிலேயே இனி இருக்கக் கூடாது. அவர்களுக்கு, மாற்று சான்றிதழ் தர வேண்டும்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
நடவடிக்கை : இது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது: கல்லுாரிகளில் அமைதியாக மாணவர்கள் பாடம் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்.
ஆனால், சில மாணவர்கள், மிக மோசமாக செயல்படுவதை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். ஆயுதங்களை துாக்கி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.