தமிழகத்தில், 17 என்ஜினீயரிங் கல்லூரி மூடப்படுகின்றன
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மோகம் கடந்த சில வருடங்களாக படிப்படியாக குறைந்து வருகின்றன.
படித்து விட்டு பல லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பதாலும், மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க கூடிய நிலை உருவாகி வருவதாலும் மாணவ-மாணவிகள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்தன.
இதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டன. சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் உள்ள கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் சேருகிறார்கள். இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் பொறியியில் இடங்கள் நிரப்பாமல் காலியாக கிடக்கின்றன. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில தனியார் கல்லூரிகளில் ஒற்றை இலக்கு அளவில் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதால் அக்கல்லூரிகளை வருகின்ற கல்வி ஆண்டில் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
17 என்ஜினீயரிங் மற்றும், எம்.பி.ஏ. கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டில் மூடப்படுகிறது. தமிழ்நாட்டில் என்ஜினீயரிங், ஆர்க்கிடக்சர், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. என 600 கல்லூரிகள் உள்ளன.
இதில் 12 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன. அதே போல் 5 எம்.பி.ஏ. கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டு பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை. பாடப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும். கடந்த 21-ந் தேதி அங்கீகாரம் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், “இந்த வருடம் பல பொறியியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைக் கழகத்தில் சரண்டர் செய்ய விண்ணப்பித்துள்ளது.
சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில் நுட்பம் பாடப்பிரிவுகள் இதில் அடங்கும். சில கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களையும் சரண்டர் செய்ய விரும்புகின்றன.
தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் எண்ணிக்கை குறைந்து வருகின்றன” என்றார்