8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கூடாது; கட்டாயத் தேர்ச்சி தொடர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களை கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க கட்டாயத்தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் காரணத்தை தான் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையினரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறியுள்ளனர். இது அபத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
மத்திய அரசு கை காட்டும் திசையில் கண்ணை மூடிக் கொண்டு பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ள தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டப்பூர்வமாக்கப் பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012&ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதுதொடர்பான கல்வி உரிமைச் சட்டத்தையும் திருத்தியது.
மத்திய அரசின் இந்த முடிவை கடந்த ஆண்டே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சி முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், கல்வித்தரம் குறைந்து விட்டதாக அதற்குள்ளாகவே மத்திய அரசு எவ்வாறு கண்டறிந்தது என்பது தெரியவில்லை. கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் பயனில்லை.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளை காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.
பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக செய்யப்பட வேண்டியவை ஏராளம். 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து விட்டால் கல்வித்தரம் அதிகரித்து விடும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தமான வாதம். இதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாகும். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 5 அல்லது 8 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தால் அதன்பின் அவர்களை தொடர்ந்து படிக்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக மாணவர்கள் அவர்களின் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உதவியாக அனுப்பி வைக்கப்படுவர். மாணவிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும். சமூகத்தை சீரழிக்கும் குலக்கல்வி முறையும், குழந்தைத் திருமண முறையும் மீண்டும் தழைத்தோங்குவதைத் தான் அரசு எதிர்பார்க்கிறதா? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும், மாறாக கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து, மலர வேண்டிய கல்வி மொட்டுகளை கருக்கி விடக் கூடாது. எனவே, 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களை கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்"