பொறியியல் பாடம் மாற்றம்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளுக்கான பாடத்திட்டம், மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்விக்களுக்கான பாடத்திட்டத்தை, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் முடிவு செய்கிறது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் டில்லியில் நேற்று கூறியதாவது:
தொழில்நுட்பட துறையில், நாடு பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கேற்ப, பாடத்திட்டங்களை மாற்றி, கல்விதரம் உயர்ததப்பட வேண்டும். ஆண்டுதோறும், தொழில்துறையின் தேவைக்கேற்ப, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில், கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான், கல்விக்கு, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், பொறியாளர்களுக்கு ஒரு பெரும் வழிகாட்டியாக இருக்கும். தொழில் மற்றும் சமூகத்துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இது, தொழில் மற்றும் சமூக தேவைகளுடன், பொறியியல் பட்டதாரிகளை இணைக்க பெரிதும் உதவும்.
புதிய பாடத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் கோடை விடுமுறையில், தொழிற்சாலையில், மாணவர்கள் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இது, அவர்களின் திறனை மேம்படுத்தும், என்றார்.