ஆன்லைன் பத்திரப்பதிவு நிறுத்தம் பிப்., முதல் வாரம் வரை நீட்டிப்பு
தமிழகத்தில், ஜன., 22 முதல், நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு நிறுத்தம், பிப்., முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் வாயிலான பத்திரப்பதிவுக்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 154 அலுவலகங்களில், இந்த நடைமுறை செயல்பாட்டில் இருந்தது. அனைத்து அலுவலாங்களிலும், இந்த நடைமுறையில் பத்திரப் பதிவுக்கான திட்டத்தை, ஜன., 29ல், முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில், தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளுக்காக, ஜன., 22 முதல், நான்கு நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக, பதிவுத்துறை தலைவர் அறிவித்திருந்தார். இதன்படி, நாளை, செயல்பாட்டிற்கு வர வேண்டும். ஆனால், ஆன் லைன் பத்திரப்பதிவு, பிப்., முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, ஆன்லைன் முறையிலான பதிவு நடக்காது எனவும், அதுவரை, 'ஸ்டார் 1.0' சாப்ட்வேர் வாயிலாகவே, பதிவுகளை மேற்கொள்ள, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். முதல்வர் பங்கேற்க உள்ள, திட்ட துவக்க விழா தாமதமாவதால், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.