ஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம்: தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு
விருப்ப அடிப்படையில் விரைவில் 578 பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களாக பணி அமர்த்த தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் செயல்பட்டு வரும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உபரி இடங்கள் மற்றும் தேவை அடிப்படையில் மாவட்டங்களுக்கு இடையே பணிநிரவல் செய்யப்பட்டனர்.
திட்டப்பணிகள் பாதிப்பு
மேலும், ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்குச் செல்வதால் ஏற்பட்டுள்ள 228 காலி இடங்கள், இந்தக் கல்வி ஆண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் 578 காலி இடங்களால் திட்டப்பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, 578 ஆசிரியர் பயிற்றுநர்களை பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் நிரப்ப எஸ்எஸ்ஏ இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் பயிற்றுநராக பணிமாறுதலில் செல்ல விருப்பம் உள்ளவர்களை நேர்காணல் மூலம் தேர்வுசெய்து மாற்றுப்பணி மூலம் பணிமாறுதல் வழங்கப் படும்.
ஆசிரியர் பயிற்றுநர் பணியில் அந்த ஆசிரியரின் பணி திருப்தியாக இல்லாவிட்டால் அவர் தனது தாய்த்துறைக்கு திருப்பி அனுப்பப்படுவார்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 3 ஆண்டு கள் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பம் உடைய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து (1.1.2006-க்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்) விருப்ப விண்ணப்பம் பெற்று அந்தப் பட்டியலை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்.