ஆன்லைன் பத்திரப்பதிவு வரும் 22 முதல் 4 நாள் நிறுத்தம்
தமிழகத்தில், வரும், 22 முதல், 25ம் தேதி வரை, 'ஆன்லைன்' வாயிலான பத்திரப்பதிவு, நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், 578 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன்லைன் வாயிலான பத்திரப்பதிவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 154 அலுவலகங்களில் முழுவீச்சிலும், மற்ற அலுவலகங்களில் பாதியளவும், ஆன்லைன் பத்திரப்பதிவு நடந்து வருகிறது. அனைத்து பத்திரப் பதிவுகளையும், ஆன்லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ளும் திட்டத்தை, விரைவில், முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்துக்காக பயன்படுத்தப்படும், 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில், தொழில்நுட்ப சீரமைப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், வரும், 22 முதல், 25 வரை, இந்த சாப்ட்வேர் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில், 'ஸ்டார் 1.0' சாப்ட்வேரை பயன்படுத்தி, பழைய நடைமுறையில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.
இது தொடர்பான சுற்றறிக்கையை, பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன், அனைத்து, டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் - பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ளார். சாப்ட்வேர் சீரமைப்புக்கு பின், ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவின் போது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.