95 சதவிகிதம் ஆதார் பணிகள் நிறைவு
தமிழகத்தில் 95 சதவிகிதம் ஆதார் பணிகள் நிறைவுற்றன. விரைவில் நுாறு சதவிகிதத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என மத்திய அரசின் ஆதார் பணிகள் (டில்லி) மண்டல மேலாளர் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) வெங்கடேஷ் தெரிவித்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவுகள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட கணினி விவர பதிவாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
சி.இ.ஓ., மாரிமுத்து தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், புள்ளியியல் அலுவலர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆதார் பதிவு குறித்த சந்தேகங்களுக்கு வெங்கடேஷ் விளக்கம் அளித்து, நிலுவையில் உள்ள 5 சதவீதம் பணிகளையும் விரைவில் முடிக்க வலியுறுத்தினார்.
பின் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
எனது கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் 95 சதவிகிதம், புதுச்சேரியில் 97 சதவிகிதம் ஆதார் பணிகள் முடிந்துள்ளன. கேரளா மற்றும் லட்சத்தீவில் 100 சதவிகிதம் பணி நிறைவுற்றது.
ஐந்து வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவை விரைவில் முடிக்க கணினி விவர பதிவாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு
பள்ளிகள் மூலம்
விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவில் தமிழகத்திலும் நுாறு சதவிகிதம் ஆதார் பதிவு பணியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.