முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புதுப்பேட்டை அரசுப் பள்ளி புத்தம் புதிதானது
பண்ருட்டியை அடுத்த தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டையில் 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இப்போது அரசு மேல்நிலைப் பள்ளியாகச் செயல்படுகிறது.
பண்ருட்டி நகரத்திற்கு பின் இங்கு தான் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த 4 ஆண்டுளுக்கு முன்னர் தான் பெண்கள் மேநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு அவர்கள் தனிக் கட்டிடத்தில் பயின்று வருகின்றனர்.
அருகில் பல்வேறு ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள் முளைத்திருந்தாலும், இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையாமல் இருப்பதாக தெரிவிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் காமராஜ், இந்தப் பள்ளி, தற்போது முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பொலிவு பெற்றுள்ளது என்கிறார்.
இந்தத் தகவலை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட இப்பள்ளியின் முன்னாள் மாணவரான தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்தது:
பள்ளிக்குப் பின்புறம் தான் எங்களது வீடு இருந்தது. அவ்வப்போது சொந்த ஊருக்கும் வந்து செல்லும் நான், ஒருநாள் எதேச்சையாக பள்ளிக்குள் சென்றேன். குடிநீர் தொட்டி பழுதடைந்து கிடந்ததைப் பார்த்தேன். கழிப்பறைகளும் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதைக் கண்டேன்.
என்னை இந்த அளவுக்கு உயர அடித்தளம் அமைத்துக் கொடுத்த பள்ளியை சீரமைக்க எண்ணி, பள்ளித் தோழன் சாமிநாதனை தொடர்பு கொண்டேன்.
பின்னர் பள்ளியில் நிலவும் குறைபாடுகளை ஆய்வுசெய்து 10 பணிகளை செய்து முடிக்க முடிவுசெய்து, பள்ளித் தலைமையாசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு முறையாக கடிதம் எழுதி சீரமைப்பு பணியைத் தொடங்கினோம்.
சமூக வலைதளங்கள் மூலமாக அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்தோம். அதன்வாயிலாக முன்னாள் மாணவர்கள் மேலும் பலர் இணைந்தனர். அதுவே எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது. மாவட்ட நிர்வாகமும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. இப்போது பள்ளிக்கு மிடுக்கான தோற்றம் கிடைத்திருக்கிறது. இதை மாணவர்களும், ஆசிரியர்களும் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
உடனிருந்த முன்னாள் மாணவர் சாமிநாதனும் அதையே ஆமோதித்து பேசத் துவங்கினார். அவர் கூறியது:
மிகவும் ஏழ்மையான நிலையில் தான் பள்ளி வகுப்பை முடித்தோம். அடிக்கடி சொந்த ஊர் வரும்போதெல்லாம் படித்த பள்ளியை பார்க்கும்போது, ‘என்னை உயர்த்திய பள்ளி, இந்த நிலைமையில் உள்ளதே!’ என்ற ஆதங்கம் இருந்தது. பள்ளியின் தேவைக் குறித்து தலைமையாசிரிடம் பேசினோம். முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டோம்.
160 பேர் வரை தற்போது இணைந்துள்ளனர். இதன்மூலம் ஒரு அறக்கட்டைளையும் துவக்கியிருக்கிறோம்.
முதற்கட்டமாக தரைமட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் இருந்த பள்ளி வளாகத்தை மண் கொட்டி நிரப்பினோம். இதன்மூலம் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் விழும் மழைநீரை அருகிலுள்ள குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வாய்க்காலை தூர்வாரி, குளத்தையும் தூர்வாரி, சீரமைத்துள்ளோம். அடுத்ததாக குடிநீர் தொட்டியை புனரமைத்து, வகுப்பறைக் கட்டிடங்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையாக வர்ணம் பூசுதல், ஸ்மார்ட் கிளாஸ்,நூலகம், கழிப்பறைகள் தூய்மை போன்ற பணிகளை செய்துள்ளோம்.
தொடர்ந்து நூலகம் அமைத்து, பெரிய எழுத்தாளர்கள் இயற்றிய நூல்கள், இலக்கிய நூல்களை இடம்பெறச் செய்துள்ளோம். அதேபோன்று பாடங்கள் மாணவர்களை எளிதாக சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ‘ஸ்மார்ட் கிளாஸ்.’ இந்தப் பணியை இதோடு விட்டுவிடாமல், அறக்கட்டளை மூலம் பள்ளியின் தூய்மையை பராமரிக்கும் வகையில் இரு பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலு்ம் இரு துவக்கப் பள்ளிகளை தத்தெடுக்கும் யோசனையும் உள்ளது என் றார்.
புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட கடலூர் ஆட்சியர் பிரசாந் மு.வடநேரே கூறுகையில், “பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் எடுக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்களையும், நல்ல மாணவர்களை உருவாக்கிய முன்னாள் ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.
“இப்பள்ளியை பார்க்கும் போது, நான் படித்த பள்ளி எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை. இனி நானும் எனது சொந்த ஊர் சென்று, நான் படித்த பள்ளிக்கு இதுபோன்று செய்ய முடியுமா என பார்வையிடப் போகிறேன்’’ என்று இப்பள்ளிக்கு அண்மையில் வருகை தந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூற, அங்கிருந்த நமக்கும் அந்த நினைப்பு வந்து போனது.