18 சிறார்களுக்கு தேசிய வீரதீர விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு
கடந்த ஆண்டுக்கான தேசிய வீர தீர விருதுகளுக்கு 18 சிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் வீர தீரச் செயல்கள் புரியும் சிறார்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது, பொது வீர தீர விருது ஆகிய 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 11 மாணவர்கள், 6 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக விரோத சக்திகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல், சட்ட விரோத சூதாட்ட கும்பல் குறித்து காவல் துறையினருக்கு துப்பு கொடுத்த நாசியா (18) என்ற மாணவிக்கு பாரத் விருது வழங்கப்படவுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குளம் ஒன்றில் மூழ்கிய 2 சிறுவர்களை மீட்க முயன்ற நேத்ராவதி எம்.சவாண் (14) என்ற மாணவிக்கு, அவருடைய மறைவுக்குப் பிறகு கீதா சோப்ரா விருது வழங்கப்படவுள்ளது. குளத்தில் மூழ்கிய 16 வயது மாணவனை மீட்டு வெளியே கொண்டு வந்த நேத்ராவதி, மற்றொரு சிறுவனை மீட்க முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதேபோல், வீரதீரச் செயல்களின்போது உயிரிழந்த மிúஸாரம் மாநிலத்தைச் சேர்ந்த லால் சந்தமா (17), மணிப்பூரைச் சேர்ந்த லோக்ராக்பம் ராஜேஸ்வரி சானு (15) ஆகியோருக்கும் வீரதீர விருதுகள் வழங்கப்படவுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கிய பள்ளிப் பேருந்தில் இருந்து 15 சிறார்களைப் பத்திரமாக மீட்ட கரண்வீர் சிங்(17) என்பவருக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கப்படவுள்ளது.
மேகாலயத்தில் தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து 3 வயது தம்பியை மீட்ட பெட்ஷ்வாஜான் பெயின்லாங் (14) என்ற மாணவருக்கும், ஒடிஸாவில் முதலையின் வாயில் இருந்து தனது தோழியை மீட்ட மம்தா தலாய் (7) என்ற சிறுமிக்கும், கேரளத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் வின்சென்ட் (13) என்ற சிறுவருக்கும் பாபு கைதானி விருது வங்கப்படவுள்ளது.
இவர்களைத் தவிர, ராய்ப்பூரைச் சேர்ந்த லட்சுமி யாதவ் (16), நாகாலாந்தைச் சேர்ந்த மானஷா(13), சங்போன் கோன்யாக் (18), யோக்னேய் (18), சிங்கை வாங்ஸா(18), குஜராத்தைச் சேர்ந்த சம்ரிதி சுஷில் சர்மா(17), மிúஸாரம் மாநிலத்தைச் சேர்ந்த சோனுந்த்லுவாங்கா (16), உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சேம்வால்(16), மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நடாஃப் இஜாஸ் அப்துல் ரெளஃப் (17), ஒடிஸாவைச் சேர்ந்த பங்கஜ் மஹந்தா(15) ஆகியோரும் வீர தீர விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி விருதுகளை வழங்குவார். விருது பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்படும்.
விருது பெறுவோர், தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்தளிப்பார்.
விருது பெறும் சிறார்களை, மத்திய அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வ அமைப்புகள், இந்திய சிறார் நலன் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு தேர்ந்தெடுத்துள்ளதாக, சிறார் நலன் கவுன்சிலின் தலைவர் கீதா சித்தார்த்தா கூறினார்.
விருது பெறுவோரில் தகுதியானவர்களுக்கு அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.