அனைவருக்கும் வீடு : கூடுதல் நிதி தேவை
'பிரதமர் நரேந்திர மோடியின், அனைவருக்கும் வீடு திட்டத்தை, 2022க்குள் நிறைவேற்ற, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்' என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கோரி உள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில், மத்திய, மாநில அரசு வழங்கும் நிதியில், பயனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்படும். இத்திட்டம் குறித்து, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு, மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதுவரை மொத்தம், 12 ஆயிரம் கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டு உள்ளது.
வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினால், மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து, திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.