சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் யோகா பயிற்சி
9-வது இந்து ஆன்மிக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று பள்ளிக்கூட மாணவர்கள் கலந்து கொண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் 42 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். பெரும்பாலான மாணவர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருந்தனர்.
அப்போது பெற்றோரை வணங்குதல், பெண்மையை போற்றுதல் போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல்வேறு யோகாசனங்கள் நிகழ்த்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வித்யாபாரதி அமைப்பின் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் சின்மயா யுவக்கேந்திரா அமைப்பின் அகில உலக தலைவர் சுவாமி மித்திரானந்தா, காக்னிசன்ட் நிறுவன துணைத்தலைவர் லட்சுமி நாராயணன், பதஞ்சலி யோகா சமிதி மாநில தலைவர் பாரஸ்மல், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக யோகாசன துறை தலைவர் பேராசிரியர் ஆர்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மேலும் விவேகானந்தா கல்விக்குழுமத்தின் உடற்கல்வி இயக்குனர் ஜெகதலப்பிரதாபன், மகிளா பதஞ்சலி யோக் சமிதியின் தமிழ் மாநில தலைவர் ராஜேஸ்வரி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.