பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்: இறுதிக்கட்ட பணியில் நிதித்துறை தீவிரம்
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.8-ம் தேதி தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். இதில், மகளிருக்கு வழங்கப்படும் இருசக்கர வாகன மானியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பின், 4 நாட்கள் கூட்டம் நடந்து ஜன.12-ம் தேதியுடன் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை தள்ளி வைக்கப்பட்டது.
வழக்கமாக, மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் அடுத்த 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய, மாநிலஅரசுகள் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான், அடுத்த ஆண்டுக்கான செலவினங்களுக்கு நிதியை பங்கிட முடியும். இதன்படி, மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும், மாநில பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.
இந்தாண்டு, மத்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி கடந்தாண்டைப்போல் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த முறை மார்ச்.16-ம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஆனால், இம்முறை, புதிய நிதியமைச்சரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருவாய் குறித்த திட்டம்
இதுகுறித்து அவர்கள் கூறும்போது,‘‘வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை டிசம்பரில் தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு முன்னர் திட்டமிட்டது. இதையடுத்து, தமிழக அரசிலும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து துறைகளிலும் இருந்து தேவைகள் பெறப்பட்டு, அவற்றுக்கான வருவாய் குறித்த திட்டம் தீட்டப்பட்டது. துறை அமைச்சர்களும் அவ்வபோது துறை ரீதியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். இந்த வகையில் இறுதிக்கட்டத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் உள்ளன’’ என்றனர்.
இப்பணிகள் முடிந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் பட்ஜெட் தேதியை ஆளுநருக்கு பேரவைத் தலைவர் பரிந்துரைப்பார். அதை ஆளுநர் ஏற்று அறிவிப்பார். இந்த நடைமுறையின்படி, இந்தாண்டு பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தலைமைச் செயலக வட்டாரங்கள் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘இதுவரை பேரவை செயலகத்தில் இருந்து ஆளுநருக்கு எந்த கோப்பும் செல்லவில்லை. இருப்பினும் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்’’என்றன.
நிவாரணத் தொகை
தமிழகத்தில், கடந்த ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒக்கி புயல் பாதிப்பு, மழை பாதிப்பு நிவாரணம் போன்றவை வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது ஜெயலலிதா, கைபேசி வழங்கும் திட்டம் அறிவித்தார். அவர் அறிவித்த மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், கைபேசி திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்திட்டம் குறித்த அறிவிப்பு நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதேநேரம், தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன் இருப்பதாக விமர்சிக்கும் தமிழக எதிர்க்கட்சிகளும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப காத்திருக்கின்றன.