உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்!: தில்லி கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பெருமிதம்
தில்லி விஞ்ஞான் பவனில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர்
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் 46.9 சதவீதத்துடன் நாட்டிலேயே தமிழக முதலிடம் வகித்து வருகிறது என்று தில்லியில் நடைபெற்ற 65-ஆவது மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில்,தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில்தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமைநடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:
மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் மனித வள மேம்பாட்டு துறையின் 2016-17-ஆம் ஆண்டுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் உயர் கல்வியின் வளர்ச்சி குறித்தும், உயர் கல்வி வளர்ச்சிக்கான மாநிலங்களின் பணி குறித்தும் பேசப்பட்டது.இன்றைக்கு உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பிடம் வகிக்கிறது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகத்தில் 46.9 சதவீதமாக உள்ளது. அதேவேளை இந்திய சராசரிவிகிதம்25.2 சதவீதம்தான். யூனியன் பிரதேசங்கள் அளவில் 56.1 சதவீதத்துடன் சண்டீகர் முதலிடத்தில் உள்ளது.
மாநிலங்கள் அளவில் தமிழகம் உயர் கல்வி சேர்க்கையில் கொண்டுள்ள இத்தகைய வளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைத்தேன். இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மேற்கொண்ட பணிகள்தான். அவர் 2011-ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், புதிதாக நான்கு அரசுப் பொறியியல் கல்லூரிகள், 16 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 21 கலை, அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் என்று 65 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதேபோன்று, 961 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் எட்டும், பல்கலை உறுப்புக் கல்லூரிகள் மூன்றும் என 12 புதிய கல்லூரிகளைத் தொடங்கினார். மேலும், 270 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டன. அதன்படி, ஏழு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் புதிதாக 77 கல்லூரிகளும், 1,231 பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, உயர் கல்வி மொத்த மாணவர் சேர்க்கையில் இந்திய சராசரி 25.2 சதவீதமாக இருந்தபோதிலும் தமிழகம் 46.9 சதவீதம் என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் உலகளவிலான சராசரி 36 சதவீதம்தான். இத்தகவல் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
அதேபோன்று, ஆதிதிராவிட மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையானது இந்திய அளவில் 21.1 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இதன் சதவீதம் 38.3 சதவீதமாகமாகவும், பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கையில் இந்திய அளவில் 15.4 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் இது 36 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அனைவருக்கும் உயர் கல்வியைத் தர வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டதால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தின் உயர் கல்வியின் தரம் உள்ளது.
அதேபோன்று, இந்தியாவில் 799 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழகத்தின் 24 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைகளும், முதல் 100 கல்லூரிகளுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகளும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தின் 21 பொறியியல் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
இலவச பேருந்து அட்டை, பயிற்சிக் கட்டணத்தில் சலுகை, பிஎச்.டி. படிக்க கல்வி உதவித் தொகை என பல்வேறு சலுகைளை தமிழக அரசு அறிவித்த காரணத்தால் உயர் கல்வி பயில தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த விஷயங்களை ஆலோசனை வாரியக் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.
புதிய கட்சி: தமிழகத்தில் புதிய கட்சியை டி.டி.வி. தினகரன் தொடங்கினால் அது அவரது விருப்பம். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இயக்கத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கும், அதிமுக அரசுக்கும் எவ்வித பாதிப்பும் வராது. இந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றார் அமைச்சர் கே.பி. அன்பழகன். முன்னதாக, இக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர் சரவணக்குமார் செய்திருந்தார்.