பசியைப் பொறுத்து சென்னைக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மராட்டிய பாலியல் தொழிலாளிகள்
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தனர்.
இதனை அவர்கள் தங்களது வருமானத்திலிருந்து சேமித்து வழங்குவதற்காக கடந்த 3 நாட்களாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு அதில் மிச்சப்படுத்திய தொகையை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
இது குறித்து ஸ்னேகாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கிரிஷ் குல்கர்னி கூறும்போது, ''அகமத்நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் சுமார் 2 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து இந்த நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.
இவர்கள் இந்தத் தொகையை தங்களது பசியையும் பாராமல் சேமித்து வழங்கியுள்ளனர்.
செய்திகளில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து அறிந்து வேதனையடைந்த அவர்கள், சென்னை மக்களுக்கு ஏதேனும தவி அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இதனை செய்துள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் உள்ள கூஞ்ச் தன்னார்வு அமைப்பின் உதவியை நாடி
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை திரட்டியுள்ளனர்." என்றார்.