நாணய தயாரிப்பை நிறுத்துங்கள்! ஆலைகளுக்கு அரசு உத்தரவு
அரசுக்கு சொந்தமான, நாணயங்கள் தயாரிக்கும் ஆலைகளில், தயாரிப்பு பணிகளை நிறுத்தும்படி, அவற்றின் பொது மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நொய்டா, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய நான்கு நகரங்களில், அரசுக்கு சொந்தமான, நாணயங்கள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் நாணயங்களை, பொது புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆலைகளில் நாணய தயாரிப்பை, கடந்த, 8ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளும்படி, அவற்றின் பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள நாணயங்கள், பிரத்யேக அறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து அறைகளும் நிரம்பி வழியும் வகையில், நாணயங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த அறைகளில் உள்ள நாணயங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று, பொது புழக்கத்தில் விட்டு, அறைகளை காலியாக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாணயங்கள் தயாரிப்பு ஆலைகளில் உள்ள பிரத்யேக அறைகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.