பள்ளியில் கணினி அறிவியலை தனிப் பாடமாக வைக்கக் கோரிக்கை
கணினி அறிவியலை பள்ளிகளில் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் மாநிலப் பொதுச் செயலர் வெ.குமரேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதிய வரைவு பாடத் திட்டத்தில் 3 முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை உருவாக்கித் தந்த தமிழக அரசு, அதைத் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் அறிவிக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவு இல்லாத பள்ளிகளிலும் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப் பிரிவைக் கொண்டு வர வேண்டும்.
காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி அறிவியலில் பி.எட். படித்து முடித்துள்ள சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்களை அமைத்து அப்பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு கணினி ஆசிரியரை அனைத்து நிலைகளிலும் நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கும் மற்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைப் போல பணி விதி, பணிவரன் முறையை உருவாக்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநாட்டை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் தொடக்கி வைத்துப் பேசினார். முன்னாள் தலைவர் ஆ.அண்ணாதுரை, தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சி.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
இதில், மாநிலப் பொருளாளர் ச.கார்த்திக், ஈரோடு மாவட்டச் செயலர் ஜோதிலட்சுமி, நிர்வாகிகள் சித்ரா, திலகவதி, கனிஷ்கர் ராவ், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.