சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி
41-வது சென்னை புத்தக கண்காட்சி நாளை(புதன்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி புத்தக கண்காட்சி நடைபெறும் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வைரவன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், துணை தலைவர் பி.மயிலவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ‘ஸ்கொலாஸ்டிக்’ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் பிப்லாப் பக்தா, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜார்ஜ், அரும்பாக்கம் முகமது சதக் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் புளோரிடா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் ‘நான் தினந்தோறும் நல்ல நூல்களை படிப்பேன். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிப்பேன். என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் புத்தகங்கள் படிக்க வலியுறுத்துவேன். தினந்தோறும் என் காலை, மாலை கடமைகள் போல புத்தகங்களை படிப்பேன்.’ என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்த புத்தகத்தில் இருந்து சில கேள்விகளை ‘பபாசி’ நிர்வாகிகள் எழுப்பினர். அதற்கு சரியான பதில் அளித்த 5 மாணவ-மாணவிகளுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன.
புத்தக கண்காட்சி குறித்து ‘பபாசி’ தலைவர் எஸ்.வைரவன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் ஆகும். அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களுக்கும் நுழைவு கட்டணம் கிடையாது.’ என்றார்.