ஆன்லைன் திட்டத்தில் 226 படிப்புகள் அறிமுகம்
மத்திய அரசின், 'ஆன்லைன்' திட்டத்தில், 226 புதிய படிப்புகளை, சென்னை, ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், 'ஸ்வயம்' மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சிக்கான தேசிய திட்டத்தில், 'ஆன்லைன்' படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படிப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து, ஆன்லைன் வழியாக, வீடியோ பதிவுகளாக பதிவேற்றப்படும் பயிற்சிகளை எடுத்து கொள்ளலாம். இறுதியில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டத்தில், தேசிய தொழில் மேம்பாட்டு பயிற்சி படிப்புகளுக்கு, என்.பி.டி.இ.எல்., என்ற இணையதளத்தில், தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் படிப்புகளை நடத்துகின்றன. அதில், இந்த ஆண்டுக்கு, 226 ஆன்லைன் படிப்புகளை, சென்னை, ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. பட்டதாரிகள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். அவர்களுக்கு, தேசிய உயர் கல்வி நிறுவன அந்தஸ்து உடைய, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.