நாட்டா நுழைவு தேர்வு அறிவிப்பு : ஜன. 16ல் பதிவு துவக்கம்
பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவு தேர்வு, ஏப்., 29ல் நடத்தப்படும் என, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பை போல், அண்ணா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளின் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் சேர, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஓராண்டுக்கு முன் வரை, கணினி முறையில் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவரும், ஒரே ஆண்டில், ஐந்து முறை தேர்வு எழுதலாம். இதில் அதிகமான மதிப்பெண், தேர்ச்சிக்கான கணக்கில் எடுக்கப்படும். இதில், பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால், 2017 முதல், ஆண்டுக்கு ஒரு முறை தேர்வான, நாட்டா நுழைவு தேர்வு நடைமுறைக்கு வந்தது. புதிய நடைமுறை பற்றி தெரியாததால், சென்ற ஆண்டில், பல மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதாமல், பி.ஆர்க்., படிக்க முயன்றனர். கல்லுாரிகளிலும், காலி இடங்கள் இருந்தன. கல்லுாரிகளின் கோரிக்கைபடி, தமிழக அரசின் சார்பில், 'தமிழக நாட்டா' தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 800 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, பி.ஆர்க்., இடங்களில் சேர்ந்தனர்.இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவு தேர்வை, தேசிய 'ஆர்கிடெக்ட்' கவுன்சில் நேற்று அறிவித்தது. இதன்படி, ஏப்., 29ல், நாடு முழுவதும் தேர்வு நடக்கும். வரும், 16ம் தேதி முதல், மார்ச் 2க்குள், https://learning.tcsionhub.in/test/nata-2018 என்ற இணையதள இணைப்பில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஜூன், 1ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.