708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்
41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 ஆயிரம் புதிய தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ். வைரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன், துணை தலைவர்கள் பி.மயிலவேலன், ஏ.ஆர்.சிவராமன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
வாசகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 708 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா 22, பொது அரங்குகள் 24 அடங்கும்.
376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் 236 தமிழ் பதிப்பாளர்களும், 102 ஆங்கில பதிப்பாளர்களும், 14 மல்டி மீடியா பதிப்பாளர்களும், 24 பொது பதிப்பாளர்களும் அடங்குவர்.
வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தலைப்பிலான புதிய புத்தகங்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
புத்தக கண்காட்சி தொடக்க விழா 10-ந்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பபாசியின் புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்குகிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். மேலும் சிறந்த பதிப்பாளர், விற்பனையாளர், எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
புத்தக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கில் 8-ந்தேதி நடக்கிறது. வாசகர்களை கவரும் வண்ணம் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை புத்தக கண்காட்சி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.
சிலை திறப்பு விழா 11-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
பெண்களை போற்றும் விதமாக 12-ந்தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.இறையன்பு, எம்.ராஜாராம், என்.சுப்பையன், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு, பேச்சாளர்கள் பழ.கருப்பையா, கு.ஞான சம்பந்தன், சுகி சிவம் பாரதி பாஸ்கர், திரைப்பட நடிகர் சமுத்திரகனி உள்பட பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
புத்தக கண்காட்சி நிறைவு விழா 22-ந் தேதி (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் தலைமை தாங்குகிறார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார். எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எல்.மனோகரன் வாழ்த்துரை வழங்குகிறார்.
41-வது புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கிறது. அதன்படி 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதை கடந்தவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி செயல்படும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவை போன்றவற்றிற்கும் தனியாக அரங்குகள் உள்ளன.
கார்கள் நிறுத்துவதற்கு ரூ.30-ம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் ரூ.13 கோடி வருவாய் கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை அமைந்தகரையில் நடந்து வந்த ‘மெட்ரோ ரெயில்’ பணியால் கடந்த சில ஆண்டுகளாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி நடந்து வந்தது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து சென்னை புத்தக கண்காட்சி மீண்டும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கில இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.