பிளஸ் 1 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஜன.8 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு தகுதியான நேரடித் தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியும், வரும் 1.4.2018 அன்று பதினைந்தரை வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று திங்கள்கிழமை (ஜன.8) முதல் வெள்ளிக்கிழமை (ஜன.12) மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் அறிந்து கொள்ளலாம்.
தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக எந்தவித முன்னறிவிப்புமின்றி தானாகவே நிராகரிக்கப்படும்.
மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஜன.17 முதல் ஜன.19 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.