குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை மாற்ற கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் பிறந்த தேதி, பாலினம், சாதி பிரிவு, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய தகவல் விவரங்களில் மட்டும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் 10.01.2018க்குள் மாற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மா. விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2017 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதற்கான இணையவழி விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட சில விவரங்களை அவர்களே விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. எனினும் சில விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்த தேதி, பாலினம், சாதி பிரிவு, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் ஆகியவற்றை விண்ணப்பத்தில் தவறுதலாக தெரிவித்துள்ளதாக தெரிவித்து அதனை மாற்றக் கோரி மனு அனுப்பியுள்ளனர்.
பொதுவாக இத்தகைய மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ஏற்கெனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்தேர்வுக்கு மட்டும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கலாம் என தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் பிறந்த தேதி, பாலினம், சாதி பிரிவு, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய தகவல் விவரங்களில் மட்டும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில், அவர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தினை www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு 10.01.2018க்குள் தேர்வாணைய அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் பசிசீலிக்கப்படமாட்டாது.
பெயர் மாற்றம், கல்வித்தகுதி / தொழில்நுட்ப தகுதி முகவரி, மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவை விண்ணப்பதாரர்களே விண்ணப்பிக்க கடைசி நாள் வரை மாற்றம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டிருந்ததால் இதுபோன்ற விவரங்களை மாற்றக்கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
தேர்வு நடத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதால் 10.01.2018 தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. இத்தகைய மாற்றம் செய்யும் வழிவகை தொகுதி – 4 தேர்வுக்கான விண்ணப்பத்திற்கு மட்டுமே பொருந்தும். நிரந்தரப் பதிவில் மாற்றங்கள் செய்யவேண்டுமெனில் அதனை தனியே மின்னஞ்சல் வழியே அனுப்பவேண்டும்'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.