ஆதார் கைவிரல் ரேகை பாதுகாப்பது எப்படி?
'ஆதார்' பதிவேட்டில் உள்ள, தனி நபர் கைவிரல் ரேகையை பாதுகாக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது. எனினும், தனிப்பட்ட விஷயங்கள், ஆதாருக்காக சேகரிக்கப்படுகின்றன. அவை கசிந்தால், பெரும் பாதிப்புகள் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 500 ரூபாய் கொடுத்தால், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது. அதை, அரசு மறுத்துள்ளது. ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற, தகவல் தொகுப்பில், தனிநபர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் கிளப்பப்படுகிறது. அதைப் போக்க, ஒரு வழி உள்ளது.
ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், 'கிளிக்' செய்ய வேண்டும். பின், உரிய இடத்தில், ஆதார் எண்ணை பதிவிட்டால், அலைபேசிக்கு, 'பாஸ்வேர்டு' வரும். அதை பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை, 'லாக்' ஆகிவிடும்.
அதாவது, யாருமே அதை பார்க்க முடியாததாகி விடும். அதை நீங்களே கூட, எங்கும் பயன்படுத்த முடியாது. அதை, மீண்டும் செயல்படுத்த, இணையதளத்தில், அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்தால் மட்டுமே முடியும்.